தமிழ் வழிப்படுவோம் !

அரசியல் விடுதலையை நோக்கிய பயனித்துக் கொண்டிருக்க கூடிய ஒரு இனம், பண்பாட்டு விடுதலையை அடைய வேண்டியது முதற்பணி. பண்பாட்டு விடுதலையே அரசியல் விடுதலையினை ஒழுங்கமைக்க கூடியதும் மக்களை அணி திரட்டக்கூடியதுமான ஒரு தலையாய வழிமுறையாகும். உலகின் பல தேசிய இனங்கள் பலவும் பண்பாட்டு விடுதலையின் பின்னரே அரசியல் விடுதலையை பெற்றுக் கொண்டமைக்கு அயர்லாந்து விடுதலையை உதாரணமாக கொள்ளலாம். இன்று செல்லும் வழியறியாது தத்தளிக்கும் தமிழருக்கு தமிழ் மொழி மூல வழிபாடானது மிகவும் சிறந்ததொரு புரட்சிகரமான மாற்றத்தினை அனைத்து தளங்களிலும் ஏற்படுத்திக் கொடுக்கும் என்பது மறுக்க முடியாதவொன்றாகும்.

தமிழ் மொழியிலான இறைவழிபாட்டிற்கான தேவை தற்காலத்தில் உணர்ந்து கொள்ளப்பட்டு வரக்கூடிய சூழலில் இலங்கையில் சில கோவில்கள் தூய தமிழ்மொழியினால் இறைவனை குளிர்விக்கும் காலத்தின் கட்டாய பெரும்பணியினை ஆற்றி வருகின்றன. இந்த தமிழ்மொழி வழிபாடானது இடம்பெறக்கூடிய கோவில்களின் எண்ணிக்ளை கையிலுள்ள விரல்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டதாகவே காணப்படுகின்றது. இதற்கு காரணம் தமிழ்மொழிக்கு ஆளுமை இல்லையா? இல்லை தமிழ்மொழி தனது ஆளுமையை நிரூபிக்கத்தவறி விட்டதா?

தமிழ்மொழி பூரண ஆளுமையோடு கோவில்களின் ஆட்சிக்கட்டில் அமர்ந்திருந்தமையை வரலாற்று ஆதாரங்களும் தமிழ் தெய்வ நூல்களும் ஆதாரரப்படுத்துகின்றன். தவறான கற்பிதங்களால் வேறுமொழியில் இறைவழிபாட்டை ஆற்றுவதை நியாயப்படுத்தும் நம்மவர்கள், உலகிலேயே முதலில் தோன்றிய மொழியென தம் மொழியை எண்ணி பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய இனம், தனது மொழியில் தானே முதலில் வழிபாட்டினை ஆற்றியிருக்கும் என்பதை உணரத்தவறியது தான் ஏனோ? 



தெய்வம் எல்லா மொழிகளிற்கும் பொது, ஆனால் அந்த தெய்வம் தான் பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முன்பு தமிழ்மொழிக்குச் சங்கம் கண்டது என்று 2000 ஆண்டுகள் பழமை வாய்ற்த மூன்றாம் தமிழ்ச்சங்க நூலான இறையனார் களவியல் உரைநூல் சான்று பகர்கின்றது. உலகை உருவாக்க உயர்நிலை உயிர்களான சதாசிவர்களை பணிகொள்ள இறைவனால் கற்பிக்கப்பட்ட முதல்மொழி தமிழ் என்று வள்ளலார் “தமிழ்” என்ற சொல்லுக்கு எழுதிய விரிவுரையில் உறுதிபட உரைக்கின்றார்.

இறைவனே! தோற்றுவித்த தமிழ் இறைவனுக்கே தெரியாது, அது இறைவனை வழிபட உகந்த மொழியல்ல என்ற அறிவு கீழ்நிலையடைந்தவர்களின் வீண் பேச்சுக்களை புறந்தள்ளி, தமிழ் நில இறைவனை, அவனுக்கே பிடித்த செழுமைமிகு தமிழால் வழிபட நமது கால்களை முன்னோக்கி வைப்போம். 

“வாதவூரன் விளம்பிட, திருற்றிற்றம்பலமுடையான் எழுதியது” என்று இறைவனே சான்றுப்படுத்திய திரவாசகம் கோவில்களின் கருவறைகளில் ஒலிப்பதற்கு தகுதியை கொண்டிருக்கவில்லையா? 

வேற்றாகி விண்ணாய் நின்றாய் போற்றி!

மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி !

ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி !

ஓவாத சத்தத்தொலியே போற்றி !

ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி !

ஆறங்கம் நால்வேதமானாய் போற்றி !

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி !

கையிலை மலையானே போற்றி ! போற்றி !

எந்த வாசகத்திற்கும் உருகாதவரையும் உருக வைக்கும் திருவாசம் கொண்டு கருவறைகளில் இறைவனையே உருக வைக்க முடியாதா?

முத்தமிழின் ஓசையாக உள்ளவன் இறைவன் என்பதை “முத்தியை, ஞானத்தை, முத்தமிழ் ஓசையை” என்ற வரிகளின் ஊடாக காட்டுகிறார் திருமூலர் - தமிழ் மூவாயிரமாம் திருமந்திரத்தில். சற்றே ஏறக்குறைய 17ம் நூற்றாண்டில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றத்தில் “தமிழின் ஒழுகு நறும் சுவையே வருக” என்று பாடியளவில் மீனாட்சியம்மன் சிறுமியாக ஓடிவந்து பாடிய குமரகுருபரருக்கு திரளான மக்களிடையே முத்துமாலை அணிவித்து மறைந்ததாக கோவில் கல்வெட்டு கூறுகின்றது.

உயர்ந்து நிற்கின்றன, அதனெதிராக வடமொழியில் புலமை பெற்ற வள்ளலார் வடமொழியில் நிகழ்ந்தாக ஒரு அற்புதத்தையும் அணு அளவிலும் காணமுடியவில்லை என்று ஒரு பாட்டில் ஒப்பிட்டு பாடி இருக்கின்றார். ( நின்கலைக்கும் வடகலையின் முதற் கலைக்கும் உறுகணக்கு உயர் பொன் மலைக்கும் அனு நிலைக்கும் உறா வன்றொண்டப் பெருந்தகையே – திருவருட்பா )

"தமிழிசையின் இனிமைக்காக ஏங்கி இறைவன் தெற்கே தில்லைக்கு வந்து கூத்தாடினானாம்" என்று திருவிளையாடற்புராணம் கூறுகின்றது. பலவிதங்களிலும் தனது ஆளுமையை நிரூபிக்கத்தவறாத தமிழை இறைவனே சான்றுப்படுத்திய தமிழை கோவில்களின் கருவறைகளில் ஒலிக்க வைக்காத வரையில், ஏனைய தளங்களில் தமிழை வாழவைக்கலாம் என்பது மடத்தனம். தவறான கற்பிதங்களிலிருந்து விடுபட்டு தாமதமின்றி தமிழால் வழிபடுவோம்.

தமிழால் வழிபடுவோம் ! தமிழ் வழிப்படுவோம் !


2019.09.18


Comments