நிஜங்களின் நிழல்கள்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 2019 ஆண்டு நடைபெற்ற ஒளிப்படக் கண்காட்சி பற்றி தாய்வீடு இதழில் எழுதிய கட்டுரை
“நிஜங்களின் நிழல்கள்” ஆம், இது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் வருடந்தோறும் இடம்பெறும் ஒளிப்படக் கலைக் கண்காட்சியின் அடையாள முகப்புப் பெயர். இந்த 2019ஆம் ஆண்டும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கே உரித்தான அதே வழமையான மிடுக்கேறிய தன்மையோடு நடைபெற்று நிறைவடைந்திருக்கின்றது. 2012 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட இக் கண்காட்சியானது நீண்டகால இடைவெளிகளிற்கு பின்னர் மீளவும் மாணவர்களின் தொடர் உழைப்பின் பலனாக மீளவும் 2018, 2019 என அடுத்தடுத்து நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது.
2019 ஆம் ஆண்டிற்கான கண்காட்சியானது கடந்த நவம்பர் மாதம் 29,30 ஆம் திகதிகள் என இரண்டு தினங்கள் கல்லூரி மண்டபத்தில் மாணவர்களினது ஆற்றல்களினையும் கலை ஆர்வத்தினையும் வெளிப்படுத்தி நின்றது. கல்லூரியின் ஒளிப்படக் கலைக்கழகத்தின் தலைவர் செல்வன்.செ.கிருசாந் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வு கல்லூரியின் துணை முதல்வர் திரு.சு.பரமேஸ்வரன் அவர்களினால் நாடா வெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்லூரி மாணவர்களினதும் பழைய மாணவர்களினதும் ஒளிப்படங்களை தனது அங்கமாகக் கொண்டு இடம்பெற்ற அதே வேளை, அயலிலுள்ள பாடசாலைகளில் உள்ள மாணவர்களிற்கும் களம் அமைத்திடும் முகமாக அவர்களது ஒளிப்படங்களையும் தன் அங்கமாகக் கொண்டது.
கலைஞன் தன் கலையை படைப்பொன்றாக சமூகத்திற்கு முன்வைக்கையில், தன் படைப்பின் மீது கலைஞன் கொண்டுள்ள கருத்தினை விட அந்த கலைப்படைப்பை ரசிக்கும் அல்லது பார்வையிடும் ரசிகரால் பல கோணங்களிலிருந்தும் பல தளங்களிலிருந்தும் முன்வைக்கப்பட்டு பலவித பொருள்கோடல் இடம்பெறுவதானது ஒவ்வொரு பார்வையாளனும் கலைஞன் ஆகிடும் தருணம். இது போன்ற வாய்ப்பு ஒளிப்படங்களிலேயே அதிகமாகும். இவ்வாறு ஒவ்வொரு பார்வையாளனும் கலைஞனாக பரிணாமம் பெற்ற செயன்முறையை, அங்கு பின்னூட்டல்களுக்காக வைக்கப்பட்டிருந்த கருத்துப் பதிவேட்டினை படிக்கையிலே இடம்பெற்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
தொழில்நுட்பம் தொடர் பரிணாம வளர்ச்சியுற்ற இந்த சந்தர்ப்பத்தில் ஒளிகளை, ஒளிப்படங்களாக வார்த்தெடுக்க ஒளிப்படக்கருவிகள் தான் தேவை என்ற நிலை மாறி, ஒவ்வொருவரும் அவரவர் கைப்பேசிகளிலேயே ஆகச் சிறந்த காட்சிகளை ஒளிப்படங்களாக்கிட முடிகிறது. இந்த கைப்பேசிகளின் வசதியினால் ஒவ்வொருவரும் ஒளிப்பட கலையை பயிலவும் வழிபேற்படுகின்றது. மேலும் அன்றாட வாழ்வில் காணும் எந்த மனதுக்குப்பிடித்த கருத்துள்ள விடயங்களையும் விரும்பிய நேரத்தில் எந்த சிரமமுமின்றி கைப்பேசிகளூடாக ஒளிப்படங்களாக்கிட இயலுமாக அமைந்திடுகின்றது. இவ்வாறு கைப்பேசிகளுடாக எடுக்கப்பட்ட அதி உன்னத ஒளிப்படங்கள் பலவற்றை “நிஜங்களின் நிழல்கள்” கண்காட்சியில் காணக்கூடியதாக அமைந்தது.
ஒவ்வொருவரும் தாம் பயனித்த மறுக்கவியலா இடங்கள், மனதை பறிகொடுத்த, கண்களுக்கு இதமூட்டிய காட்சிகள் என்றும் தமிழர் சமூக வாழ்வியல் கோலங்கள், நாளையே மூச்சடங்கி போகத் தயாராகும் இயற்கையின் கோர, சாந்த முகங்கள் என்றும், இந்த பூமிப்பந்தின் ஒவ்வொரு இயக்கத்தையும் தத்தமது ரசனைகளிற்கேற்ப ஒளியைக் கொண்டு, அந்த நிஜங்களை நிழல்களாக்கியிருக்கின்றனர்.
ஒளிப்படக்கலையையோ அல்லது ஒளிப்படங்களையோ வெறும் ஒளி வண்ணங்கள் மற்றும் அழகியலுக்கான தலமாக மட்டும் பார்த்து சென்று விட முடியாது. ஒளிப்படக் கலை என்பது மிகவும் பெரியதொரு ஆயுதம். அது சமூக பொறுப்புணர்வு மிக்கதொரு ஊடகமாகும். சாதாரணமாக அழகியல் சார்ந்த காட்சியையோ, ஒரு தெருவையையோ ஒளிப்படம் எடுப்பது இன்று எளிதாகி விட்டது. ஆனால் மக்கள் போராட்டம் ஒன்றில் சமூகத்தில் அவலத்தை எந்த ஒளிப்படக் கலைஞன் பதிவு செய்திருக்கின்றான் என்பது தான் அந்த ஒளிப்படக் கலைஞனின் அரசியல், சமூக பார்வையை வெளிக் காட்டுகிறது. ஆக சமூக பொறுப்புணர்வு கொண்ட ஒளிப்படங்களை தந்ததன் ஊடு, தமது சமூகம் பற்றிய பிரக்ஞையை மாணவர்கள் இக் கண்காட்சியின் வாயிலாக வெளிப்படுத்தியியுள்ளமை நோக்கத்தக்கது. தற்போது அனைத்துலக ரீதியாக பேசு பொருளாகியிருக்கக் கூடிய பருவநிலை மாற்றம் தொடர்பில் இன்றைய இளந்தலைமுறையினர் விழிப்புக்குள்ளாகியமை அவர்கள் காட்சிப்படுத்திய சில ஒளிப்படங்கள் வாயிலான அறிய முடியுமாகவிருந்தது. குறிப்பாக நீர் விரயம், குழைம நெகிழி பாவனை, நீர் நிலை மாசுபாடு, மிதமிஞ்சிய மர அழிப்பு, நீர் பற்றாக்குறை போன்ற பல ஒளிப்படங்களை முன்வைத்து அனைத்துலக பிரச்சினைகளை பேசியிருக்கின்றது நிஜங்களை நிழல்களாக்கிய கண்காட்சி.
தொன்மம் மிகுந்த தமிழர் கலைகள், வீரம் செறிந்த விளையாட்டுக்கள், தமிழர் தேசத்தின் கடலழகு, களனி வனப்பு, நிலவளம், அன்றாடம் எமது மக்கள் எதிர் நேக்கும் இடர்பாடுகள், அவர்களின் வாழ்க்கை முறை, தமிழர் தம் வாழ்வில் தொலைத்தவைகள், மறந்தவைகள் என்று தமிழர் நிலம் சார்ந்த அடையாளங்கள் என அனைத்தையும் மிகவும் தத்துரூபமாக முன்வைத்திருக்கிறார்கள் யாழ் இந்து பள்ளி மாணவர்கள். அவர்களை வழிப்படுத்துவதில் அவர்களது பொறுப்பாசிரியர் திரு.கு.மகிழ்ச்சிகரன் அவர்களது பணி பாரியளவானதாக இருந்தமையை அன்றைய பல செயற்பாடுகளின் ஊடாக அவதானிக்க முடிந்தது.
ஒளிப்படங்கள் நபரொருவரது சமூகம் பற்றிய பார்வையினையும் புரிதல்களினையும் மாற்றியமைக்க வல்ல சக்தி மிகு ஆயுமாகும். அந்த வகையில் மாணவர்கள் முன்வைத்த ஒளிப்படங்கள் அவற்றை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஒளிப்பட் ஆர்வலர்கள், சமூக நலன் விரும்பிகள் என்று பலதரப்பினரதும் மனதில் ஆழ வேரூன்றியிருக்ககும் என்பதிலும் முற்போக்கான புரட்சிகர சமூகமாக தன்னையும் தன்னை சூழ்ந்தவர்களையும் மாற்றியமைத்திடும் என்பதில் ஐயமேதுமில்லை.
- முற்றும் -
2019.12.19




Comments
Post a Comment