பணவேட்டையில் நுகர்வியம்
உலகமயம் ஏற்படுத்திய விளைவுகளுள் நுகர்வியமும் ஒன்றாகும். இந்த நுகர்வியம் அல்லது நுகர்வு பண்பாடானது மனிதனது நுகர்வு நடத்தையில் மாற்றத்தினை ஏற்படுத்துவதன் ஊடாக நுகர்வினை மானுடர்களிடையே நுகர்வினை ஊக்கப்படுத்துகின்றது. உலகமயத்தின் விளைவுகளில் ஒன்றாக இது ஒவ்வொரு நாட்டையும் சந்தையாகவும் மக்களையெல்லாம் நுகர்வோனாகவும் பார்க்கின்றது. இந்த நுகர்வியமானது பெரும் பன்னாட்டு நிறுவனங்களிற்கு இலாபத்தினை அள்ளிக் குவிப்பதையே பிரதான நோக்கமாக கொண்டு அவற்றை திரைமறைவில் மேற்கொள்கின்றன.
பொருளொன்றை கொள்வனவு செய்வதனை தூண்டுதலும் அவற்றின் ஊடாக பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் பணப்பசியில் இலாபத்தினை ருசி பார்த்தலுமே நுகர்வியம் ஆற்றும் ஆற்றும் பணி. இந்த பணப்பசி தீர்க்கும் இவ் பண்பாடு உலகெங்கும் அசுர வேகத்தில் யாரையும் தனது வலையில் மிச்சம் விட்டு வைக்காமல் அனைவரையும் விழுங்கி ஒரு பதம் பார்த்து விடுகின்றது. நுகர்வோரது நடத்தையினை மாற்றியமைக்க தூண்டும், நுகர்வியத்தின் ஊடு சமூகமானது துரித மாற்றத்திற்கு உள்ளாகின்றது. இந்த மாற்றம் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயற்கையேயாகும்.
உலகமயமாக்கலின் கீழாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஒடுக்குமுறைத்தன்மை வாய்ந்த பொருளாதார கொள்கையை தாங்கிப்பிடிப்பதற்காக பரப்பப்பட்டு வரும் புதிய தாராளவாதக் கொள்கையில் நுகர்வு பண்பாடானது மீயுயர் முக்கியத்துவம் முக்கியத்துவம் வாய்ந்தவொன்றாகும். தொழில்நுட்பங்களின் துணை கொண்டு கவர்ச்சிகரமானதாக வரும் இந்த நுகர்வியமானது மானுடம் தற்காலத்தில் உபயோகிக்கும் சகல வித சாதனங்கள், பொருட்கள் என ஒவ்வொன்றும் அவர்களை அறியாமலே அவர்களை ஆக்கிரமித்து விடுகின்றது.
பெரும்பாலும் மேற்கத்தைய நாடுகளில் வைத்து திட்டமிடப்படும் நுகர்வியம் அந் நாடுகளின் பண்பாட்டு அம்சங்களினை தாங்கியே மூன்றாம் உலக வளரும் நாடுகளிற்கு கடத்தப்படுகின்றன. இதனால் மேற்கத்தைய பண்பாட்டின் கூறுகள் இங்கு வரும் அதேவேளை நமது மண் சார்ந்த பண்பாட்டின் கூறுகள் எவையும் மேற்குலகிற்கு கடத்தப்படாமையின் காரணமாக பண்பாட்டு சுற்றோட்ட சமமின்மை நிலவுவதோடு, நம் நிலத்திற்குரிய பண்பாடுகள் அதிர்விற்கும் உள்ளாகின்றன. நுகர்வியம் ஊடகங்களினூடு கொண்டு செல்லப்படுகையில் ஆசிய, ஆபிரிக்க வலய பண்பாட்டு பெறுமானங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
இளைஞர்கள், சிறார்கள், பெண்கள் உள்ளிட்டோரது பலவீனத்தை பயன்படுத்து தம் நோக்கினை நிறைவேற்றிடும் பொருட்டு அவர்களை தமது முதன்மையான இலக்கு பிரிவினராக இலக்கிட்டுக் கொள்கின்றது. நிறுவனவியம், உற்பத்தியை அதிகப்படுத்தி தொழில்நுட்பங்களினை விரிவாக்கி பொருட்களை வாங்கத்தூண்டும் இவை, கவர்ச்சிகளிற்கு மயங்கும் பலவீனத்தன்மையையம் ஊடக விளங்கறிவற்ற தன்மையினையும் தமது மூலதனமாக கொண்டு அவற்றுகக்கும் பல்வேறுபட்ட உத்திகளை மிகுந்த நுணுக்கங்களோடு திட்டமிட்டு உருவாக்கி மேற்குறிப்பிட்ட தமது இலக்கு பிரிவினரை தமது அகன்ற ஆழியினுள் விழ வைத்து விடுகின்றது.
மேலோட்டமான பார்வையில் போலியான நோக்கங்களை கொண்டு காணப்படும் நுகர்வியம், மூன்றாம் உலக நாடுகளிடையே உள்ள சரியான புரிதலின்மைகளையும், இதரப ல காரணிகளையும் கொண்டு மூன்றாம் உலக நாடுகளில் காலூன்றுவதோடு, அந்நாடுகளின் கருத்துக்களையும் வாழ்க்கை கோலங்களினையும் மாற்றிடும் உள்நோக்கம் கொண்டும் செயற்படுகின்றன. உதாரணமாக “அசுபரசு” கூரைத்தகடுகளை 2003 இல் அவுத்திரேலியாவும் 2004 முதல் சப்பானும் 2005 முதல் ஐரோப்பிய நாடுகளும் அவற்றிலுள்ள சூழல் மாசுபாடு மற்றும் மனிதருக்கு ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட சுகாதார காரணங்களிற்காகவும் அவற்றின் பயன்பாடுகள், மற்றும் அவற்றின் ஏற்றுமதி இறக்ககுமதிகளை சில நாடுகளும் தடைசெய்திருந்தன. இந்த அசுபரசின் பாவனையை உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் விலக்கி கொண்டமையால், பாரிய சந்தையை இழந்த அசுபரசு உற்பத்தியில் ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளை குறிவைத்து தமது விற்பனையை பெருக்க ஆரம்பித்தன. இங்கு தமது விற்பனையை பெருக்க அவர்கள் மழைக்கோ, நீருக்கோ, வெப்பம், நெருப்பு போன்றவற்றிற்கோ சற்றும் கலங்காதது போன்ற சில விடயங்களை மட்டும் பெரிதாக காட்டி அவற்றின் பாதக விளைவுகள் தொடர்பில் மறைத்து தமது விற்பனையை பெருக்கி கொண்டன. இதனால் சூழல் நேய குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் என்று அனைத்தையும் இந்த கூரைத்தகடுகள் நிரப்பிக் கொண்டமையை குறிப்பிட்டுக் கொள்ளமுடியும்.
நுகர்வியமானது நுகர்வோரது நடத்தையில் மாற்றத்தினை ஏற்படுத்தி நுகர்வோர் உளநிலையினை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதோடு, அவற்றிற்கு திருப்தியை ஏற்படுத்த விளம்பரங்கள் உள்ளிட்டவையை பயன்படுத்திக் கொள்கின்றன. ஒவ்வொரு உற்பத்தியும் தமது பொருட்களை பயன்படுத்துவதே தற்கால நாகரீகம் என்றும் அதன் மூலமே சமூகத்தின் மதிப்பும் மரியாதையும் ஏற்படும் என்ற மனநிலையை ஏற்படுத்தி தமது உற்பத்தி மற்றும் விற்பனையை பெருக்கி கொள்கின்றது நுகர்வியம். ஊதாரணமாக அப்பிள் கைப்பேசி பாவனை பற்றி நமது சமூகத்தில் காணப்படும் மனோநிலையினை குறிப்பிட்டுக் கொள்ள முடியம். உயர்ந்த விலை, உயர்ந்த தரம் போன்ற சமூக கட்டமைப்பானது ஏற்படுத்தப்பட்டு அவ்வாறான பொருட்களை பயன்படுத்துவதே மதிப்பு என்ற நிலையினை நுகர்வியம் கட்டமைத்துள்ளது நோக்கத்தக்கது.
நுகர்வு வெறியானது ஏற்றத்தாழ்வான சமூகத்தில் மேலும் பிளவினை உண்டாக்க கூடியதாக காணப்படுகின்றது. சராசரி மனிதன் வலுமானத்திற்கு அதிகமாக நுகரத் தூண்டப்படுகிறான். பணம் அதிகம் கொண்டவன் தரமான நுகர்வை உடனுக்குடன் நுகர்கின்றார். சராசரி மனிதன் நுகர்வு மோகத்தினால் சேமிப்பற்றவனாகின்றான். பொருட்களினை நுகர்வதில் ஆசை, விதிவாதம், சுயமோகம் ஆகியன நுகர்வியத்தின் தனிச்சிறப்பான அம்சங்கள். இந்த நுகர்வு பண்பாடானது பல்வேறு வகைகளில் நிலை நிறுத்தப்பட்டு வருகின்றது. இந்த பண்பாடானது பணக்காரனது சாயலில் ஏழையை புதிதாக படைக்க முனைகின்றது. அதாவது இடைவிடாத விளம்பரங்கள், பணக்காரனைப் போல அதிகமதிகமாக பொருட்கள் வாங்குமாறும் அவர்களைப் போலவே செலவு செய்யுமாறும் ஏழை மக்களிற்கு ஆசை காட்டுகின்றன. ஏழைகளின் மனதில் ஆசைகள் தூண்டப்படுகின்றன. ஆனால் இந்த ஆசைகளை நிறைவு செய்வதற்கான பொருளாதார வாய்ப்பும் வசதியும் இல்லாத அவர்கள் கானல் நீலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த பணவேட்டை செய்யும் பண்பாட்டில் கூட்டு சமூக வாழ்வு ஏதோவொரு விதத்தில் பாதிப்புறும் அதேவேளை குடும்ப உறவுகளிடையே அன்னியோன்னியமும் ஒற்றுமையும் இல்லாதொழியவும் செய்கின்றன. மேலும் மக்களின் சுயசிந்தனையும், செயலாற்றலும் ஐPவனற்றுப் போயின. மக்களின் உணவு பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்களும் விரைவு உணவு முறையும் பக்கவிளைவுகளுடனான இரசாயனம் கொண்ட உணவுப்பழக்கவழக்கங்களும் இதன் மூலம நிகழ்ந்துள்ளன. இளமையில் முதுமையை காணக்கூடிய சாத்தியமும் தற்காலத்தில் ஏற்பட்டுள்ளமை நோக்கத்தக்கது.
நுகர்வியத்தின் தாக்கத்திலிருந்து விடுபட்டிருக்க நுகர்வோர் ஒவ்வொருவரும் ஊடக விளங்கறிவினை விருத்தி செய்து கொள்ள வேண்ம் என்பதோடு, ஊடக விளம்பரங்களினை எச்சரிக்கையோடு அணுக வேண்டியது அவசியமானதாகும். நுகர்வு பண்பாட்டின் வளர்ச்சியானது அனைத்து வித மண் சார்ந்த பண்பாடுகளையெல்லாம் அழித்து விடுகின்றன. மனிதன் தனது தேவைக்கு மேல் நுகர்வதும், தன் சக்திக்கு மீறி நுகர விரும்புவதும் இங்கு நடக்கின்றது. இந்த நுகர்வு பல பண்பாடுகளை அழித்து தனிமனிதனை புதிய பண்பாட்டின் நுகர்வோனாக மாற்றியிருக்கின்றது. இந்த செயற்கை பண்பாட்டை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்திலிருந்து மிகவும் எச்சரிக்கை தன்மையோடு இருக்க வேண்டியது தனி மனிதன் ஒவ்வொருவருடையதும் கடமையாகும். ஏனெனில் இதன் தாக்கங்களை எதிர் கொள்ள போவது தனிமனிதனை விட சமூகமே அதிகமாகும்.


Comments
Post a Comment