எங்கள் வளமும் எங்கள் பலமும்

தமிழரின் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி....


தமிழரின் தற்சார்புப் பொருளாதாரம் தொடர்பான பயில்களத்தில், ஈழ நிலம் பாரிய தடைகளின் மத்தியிலும் பொருளாதார தன்னிறைவு, தற்சார்புப் பொருளாதாரத்தால் அடைந்திருந்ததையும், தாயகம், தேசியம். தன்னாட்சியுரிமைக்கு அடுத்ததாக தற்சார்பையும் தமிழர்கள் கொள்ளவேண்டும் என்பதையும் திரு.செல்வின் சேர் எடுத்துரைத்திருந்தார்.

உணவைக் கொண்டு விலங்குகளை மட்டுமல்ல, மனிதர்களையும் கேடயமாக்குகின்ற நிகழ்வு வரலாற்றின் பக்கங்களில் அதிகம் உள்ளதை, யானையைப் பிடிக்கும் கதையினூடாக எளிமையான புரிதலை ஏற்படுத்தியிருந்தார்.

காட்டிற்குள் யானை பிடிப்பதற்காக இலை, தழைகளால் மூடப்பட்ட பெரிய கிடங்குகளை வெட்டிய பொறி ஒன்றினுள் யானையைச் சிக்க வைத்துவிடுவர். ஓரிரு வாரங்கள் அந்த யானைக்கு அருகில் எவருமே செல்லர். யானை உணவோ, தண்ணீரோ இல்லாமல்த் தவிக்கும் வேளையில் யானை பிடிக்கும் நோக்கம் கொண்டவன், முதலில் கொஞ்சம் தண்ணீர் வைப்பான், பிறகு கொஞ்சம் உணவு வைப்பான் இப்படியே கொஞ்சங் கொஞ்சமாக மீட்பர் வந்திருக்கிறார் என்னும் உணர்வை ஏற்படுத்துவான். பிறகு யானையை விடுவித்து தங்களின் நலத் தேவைகளிற்குப் பயன்படுத்துவர்.

உலகில் அமெரிக்கா, சீனா போன்ற வல்லாதிக்கங்கள் கைக்கொள்ளும் இந்த பொருளாதார அடிமைத்தனத்தை ஒரு யானை பிடிக்கும் கதை தெளிவுபடுத்தி விட்டது.

அன்று 1972களில் மூடப்பட்ட பொருளாதாரம் நடைமுறையிலிருந்த காலத்தில் மக்களின் பொருளாதார நிலைகள், அதிலிருந்து தமிழ்ச் சமூகம் கைத்தொழிற் பொருளாதாரத்தில் மேம்பட்டு விளங்கியிருந்தது என்பதை எடுத்துச் சொல்கையில், அக்காலத்தில் பிறந்திராத எனக்கெல்லாம் ஒரு புல்லரிப்பு ஒரு பக்கமும், ஏன் அவையெல்லாம் இப்பொழுது இந்த ஈழநிலத்தில் இல்லை என்கின்ற யோசனை ஒரு பக்கமும் ஓடிக்கொண்டிருந்தது.

நாமெல்லாம் ஒரு பேனைவையோ / ஊசியையோ உற்பத்தி செய்ய வக்கற்றவர்கள், அதை இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றோம் என்று வியாக்கியானம் பொதுவில் பேசுவதுண்டு.

ஆனால், பேனா, பேனாமை எல்லாம் ஈழநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டது என்பதைச் சொல்கையில்....


கடைகளில் துணிகள் கூட பற்றாக்குறையான காலம் அது,

பண்டத்தரிப்பு ப.நோ.கூ. சங்கம் - சாறி

கோண்டாவில் ப.நோ.கூ சங்கம் - சில்க் சாறி

சங்கானை ப.நோ.கூ சங்கம் - சேட், ஜீன்ஸ் துணி வகை 

என்று உற்பத்தி செய்து கொண்டிருந்தன. பண்டத்தரிப்பு, சங்கானை, கோண்டாவில், இணுவில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் பாரிய துணி நெசவு ஆலைகள் காணப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் மட்டும் - பெருமாள் கோவிலடி, காங்கேசன்துறை, வட்டுக் கோட்டை என 10லிருந்து 12 வரையான அலுமினியப் தளபாடத் தொழிற்சாலைகள் இருந்தது.

கண்ணாடித் தொழிற்சாலைகள். ஸ்ரான்லி வீதியில் ஒன்று, மற்றொன்று கோப்பாயில் நீர்வேலிக்கு அருகாமையில் ஒன்று என்று மொத்தம் இரண்டு.

--

அந்தப் பொருளாதாரக் கால தமிழ்ச் சமூகத்தில் ஆகக் கூடிய சீதனம், கௌரவம் எல்லாம் சங்கக் கடை மெனேஜருக்குத் தானாம். மிகுதி ஒருத்தரும் கணக்கிலேயே இல்லையாம். அரசாங்க வேலைகாரர் எல்லோரும் வேலை முடிஞ்சு வந்தததும் சங்கக் கடையில போய் மேனேஜருக்கு உதவுவினமாம், ஏனெண்டாலாம் பங்கீட்டில கிடைக்கிற சாமானுக்காக அந்தப் பந்தமாம்....... 

அந்தக் காலத்தில் தான் உள்ளூர் உற்பத்திகள் பெருகியதொரு காலம், அந்தக்காலத்தில் மிளகாய் விற்ற காசில் கார் வாங்கியவர்கள் ஏராளம், அமெரிக்கன் பெசன் வீடு அறிமுகப்படுத்தப்படதும் அந்தக் காலத்தில் தானாம்.

துணிகள், கண்ணாடி, பீங்கான் உற்பத்திகள், அலுமினிய இரும்பு உற்பத்திகள், பேனா, பேனா மை, காகித உற்பத்தி என்று ஏராளம்....

காகிதம் அதுவும் இலங்கைத் தீவு முழுவதற்குமான காகிதத் தேவையை மட்டு, வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை தான் பூர்த்தி செய்தது, தொழிற்துறையில் உச்ச நிலையில் தமிழ் நிலம் காலமது. எங்கள் வளங்களே எங்களின் பலமாக இருந்தன என்பதை எளிமையில் விளங்கிடக் கூடியதாயிருந்தது.

போர்க்காலத்தில் பரந்தன் ரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம், வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை, என்று எல்லாம் போர்க் காலத்தில் பாதிப்படைந்திருந்த போதும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை எந்த பாதிப்பும் அடையாத போதும் தமிழ்ச் சமூம் வளர்ச்சியடைந்து விடுமே என்ற குறுகல் எண்ணத்தால் இன்று வரை இயக்கப்படாமலேயே இருக்கிறது. ஏன வரப்பை வெட்டிவிட்டால் போதும் என்ற நிலையிலுள்ள ஆனையிறவு உப்பளம் கூட கேட்பாரற்றுக் கிடக்கிறது. 


இப்படி ஒவ்வொன்று ஒவ்வொன்றாக உறிஞ்சப்பட்ட தமிழரின் ரத்தம்...


--

கடந்த 16.04.2022 (சனிக்கிழமை) அன்று பண்பாட்டு மலர்ச்சிக் கூட மண்டபத்தில் நடைபெற்ற பயில்களத்தில் திரு.ம.செல்வின் இரேனியஸ் அவர்கள் (இலங்கை நிர்வாக சேவை முன்னாள் மூத்த அதிகாரியும், சமூக எழுச்சிச் செயற்பாட்டாளரும்) அவர்களால் 'எங்கள் வளமும் எங்கள் பலமும் என்ற தொணிப்பொருளில் நிகழ்த்தப்பட்ட பயில்களம்.





Comments