திடீர் லங்கன்சின் வருகையும் சில்லறைகளின் சிதறல்களும்

கோட்டாவை வீட்டுக்கு அனுப்புகிறோம் பேர் வழி வந்த இந்த திடீர் லங்கன்ஸ் ; சிங்கக் கொடியைப் பிடிப்போம், சேர்ந்து பிடிப்போம், சிறிலங்கனாகப் பிடிப்போம், புரட்சி வெடிக்கும், சுதந்திர இலங்கை மலரும் என்று சில்லறைகள் ஆங்காங்கே சிதறிக் கொண்டிருக்கின்றன.

கோட்டபாயவை வீட்டுக்கு அனுப்புவதற்கும் சிங்க கொடியைப் பிடித்து லங்கன்ஸ் என்று சொல்வதற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. ஆனால் ஒரு உறுதியான முடிவுக்கு வரலாம், அவர்கள் எவருக்கும் தமிழ்த் தேசத்தின் துன்ப வரலாறோ, சிங்கள தேசத்தின் ஏமாற்ற வரலாறோ தெரியாதென்று.

திடீர் லங்கன்ஸ் ஆக மாறித்திரியும் நம்மவர் பலரும், எழுச்சியுடன் நடைபெற்ற போராட்டங்களை வைத்து கட்டமைக்கப்பட்ட கவர்ச்சியை நோக்கி ஓடியவர்களே! #GoHomeGota கோசங்கள் Trending இருப்பதால், ஒரு Fun விடயமாகத்தான் பார்க்கின்றார்கள். (அதை அவர்களின் பதாதை வாசகங்களே அதைக் காட்டிக் கொடுத்து விடும்) அவர்களின் பலருக்கும் கோட்டாவை வீட்டுக்கு ஏன் அனுப்ப வேண்டும் என்பதற்கான காரணமே கிடையாது.

அவர்களுக்கு துளியளவேனும் தெளிவு இருந்திருந்தால், கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதற்கும் தமிழினப் படுகொலையை நிகழ்த்திய சிங்கக் கொடியை பிடிப்பதற்கும் வேறுபாடு அறிந்திருப்பர். இங்கு பரலது நிலைமை அது தான். மறுப்பதற்கில்லை!

இதில் என்ன கவலை என்றால், கடந்த ஒரு வாரகாலமாக இடம் பெறும் போராட்டங்கள் மட்டும் தான், அவர்கள் கண்களிற்கு எட்டியிருக்கிறது என்பது தான்.!

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் கோரம் அவர்களின் தேசத்தை கூறுபோட்டு விழுங்கின் கொண்டிருக்கின்றது என்பதை திடீர் லங்கன்ஸ் அறிந்திருக்க வாய்ப்பில்லைப் போல,

நில ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கம், தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை, தாயகமெங்கும் இராணுவ ஆக்கிரமிப்பு, நினைதலுக்கான உரிமை மறுப்பு, சிறிலங்கா ராணுவத்தால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்கள். (அவர்களின் தாய்மார்கள் ஐந்து வருடங்களைக் கடந்தும் உறவுகளைத் தேடி போராடிக் கொண்டிருக்கின்றனர்.)

தங்களது தமிழ்த் தேசம், அடிப்படை உரிமைகளை காக்க தினமொன்று என்ற கணக்கில் போராடிக்கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

கோட்டாவால் மக்கள் பசியால் வாடுகின்றனர் அது மனிதத்தை கொல்லுகிறது, சோறு இல்லையென்றால் எப்படி வாழ்வது என்று அக்கப் போர்க் கதைகள் வேறு, இப்படிக் கேட்கும் அவர்களுக்கு ஈழத்தில் பிறந்த பிஞ்சு பாலகன் கூட உணவின்றி இறந்த கதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதை வைத்து தமிழ்த் தேசம் மனிதத்தை மரித்து விட்டது என்றெண்னுவதும் தவறு. இழைத்த கொடுமைகளை ஏற்று, நீதி பேசி, மரித்த மனிதத்தை பேசப் வேண்டும் என்றே கேட்கின்றோம்.

----

திடீர் லங்கன்ஸ் பலரும் இறுதி ஈழப் போரின் போது 8லிருந்து 13 வயதுச் சிறுவர்களாக இருந்தவர்களே! அவர்களில் பெரும்பாண்மையினர் இந்த நிலத்தின் இரத்தம் தோய்ந்த வரலாறு அறியாதவர்களாக வளர்க்கப்பட்டவர்கள். இது அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. தமிழினப் படுகொலையை மக்கள் மயப்படுத்தாத - மக்களை அரசியல் மயப்படுத்தாத தமிழ்த் தலைவர்களே இதன் குற்றவாளிகள்.

திடீர் லங்கன்சில் பலரும் தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் பயில்பவர்களாக / பயின்றவர்களாக உள்ளனர். அவர்கள் நினைக்கின்றனர் சிங்கள சக நண்பர்களுடன் பழகுகின்றோம் ஆகவே சமத்துவம், நல்லிணக்கம் ஏற்படுத்த சிங்க கொடியை பிடிக்க வேண்டும் என்று. ஏனோ தெரியவில்லை அவர்களுக்கு சமத்துவமில்லாத சிங்கக் கொடியால் சமத்துவம் வராதென்று. (சில தினங்களாக நிறங்களில் மாற்றம் செய்யப்பட்ட கொடியொன்று வேறு உலவுகிறது ; சிங்கத்தை கொடியில் வைத்துக் கொண்டு நிறத்தை மாற்றினால் என்ன? மாற்றாவிட்டால்த் தான் என்ன?)

அவர்களுக்கு உங்களின் துன்பங்களை, உரிமைக்கான நியாயங்களை - இந்த திடீர் லங்கன்சால் ஏன் கடந்த முடியாமல்ப் போனது?.

---

சிங்கள சகோதார மக்களின் போராட்டங்கள் யாவும் நியாமானதே அவர்களின் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்பட வேண்டும். அது எங்களை அழித்ததன் பின்வினைப் பயன் என்று கடந்து போவது பெருந்தவறு என்பதை தமிழ்த் தேசம் நினைவில் கொண்டுள்ளது.

ஆனால் அவர்களின் வாழ்க்கைக்கான போராட்டத்திற்கும்; தமிழர்களின் போராட்டமேயான வாழ்க்கைக்கும் இடையிலான வேறுபாட்டை நம் உயிர்த் தமிழர்கள் சற்றே அறிய முயல வேண்டும். அந்த புரிதலோடு, பேரன்புமிக்க சிங்கள சகோதரங்களுடன் உடன் நின்று பயணிப்பதே ஆரோக்கியமானதாகும்.

சிங்க கொடி என்பது தமிழ்த் தேசத்தை இனப்படுகொலை செய்த ஒன்று என்பதை மறந்து, அதைப் பிடிக்க துண்டப்படுகின்றோம். கோட்டாவை எதிர்ப்பதற்கு சிங்க கொடியை பிடித்துத்தான் எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்றில்லை; நாமும் லங்கன்ஸ் என்று தான் சொல்ல வேண்டும் என்றில்லை.


இவை யாவும் திடீர் லங்கன்சாய் அரசியல் தெளிவற்றுத் திரியும் நம்மவர்களுக்காக மட்டுமே.

2022.04.08



Comments