எங்களோடு ஒப்பிடுவதற்குரியனவா? சிறிலங்காவின் பிரச்சினைகள்
தமிழருக்கு நேர்ந்தவை என்பது ஒரு நூற்றாண்டுக் காலத் தொடர்ச்சி, அது திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு. அதனை எப்படி சிறிலங்காவில் தற்கால போராட்டங்களுடனும் கலவரங்களுடனும் ஒப்பிட்டு கர்மா, முன்வினை என்று மேலெழுந்த வாரியாகக் கடந்து போக முடியும்?
ராஜபக்சாக்களின் தந்தையின் நினைவுத் தூபியை இடித்தவர்களும், எங்கள் தேசத்தின் மாவீரர்கள் துயிலும் இல்லங்களை அழித்தவர்களும் கருத்தியலிலும் மனோநிலையிலும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டவர்களே!. அது சிங்கள பௌத்த பேரினவாதம். அந்த பேரினவாதம் தான் அந்த ஒற்றைக் குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டுவந்தது. அது தான் அவர்களை அகற்றவும் துடிக்கிறது.
இவ்விரு விடயமும் ஒப்பிடுவதற்கு உரியனவா? என்பதை ஒரு தடவை தமிழ்ச் சமூகம் சிந்தித்துப் பார்க்கவும் வேண்டும்.
--
கோட்டா கோ கம நூலக எரிப்பும், யாழ் பொதுசன நூலக எரிப்பும்
எந்த சமூகத்தில் நூலகம் ஒன்று அழிக்கப்படுகின்றதோ? அது சமூக பிற்போக்கின் முழுமொத்த வடிவம். இங்கு பிற்போக்கான சமூகம் எது என்பது வேறுகதை. நூலகம் ஒன்று அழிக்கப்பட்டு விட்டது என்கின்ற பொதுப் பார்வையில் இரண்டையும் ஒரே தராசில் வைப்பது எவ்விதம் பொருத்தம்??
கோட்டாகம நூலகம் என்பது தொழில்நுட்ப வளர்ச்சிக் காலகட்டத்தில்த் தோன்றிய கொட்டகை நூலகம். எங்கும் பெறக்கூடிய நூல்களை உள்ளடக்கிய குறைந்த எண்ணிக்கையான நூல்களைக் கொண்டதொன்று. நூல்கள் மின்னியலில் பெறக்கூடிய காலகட்டம். அதுவும் அதே சமூகத்தவர்களால் கலவரத்தில் அழிக்கப்பட்டதொன்று.
யாழ் பொதுசன நூலகம், ஒரு பெரும் சமூகத்தின் இருப்பதைக் தகர்க்கும் நோக்கம் கொண்டு மாற்று சமூகத்தால் தகர்க்கப்பட்டது. கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் அங்கம். மேலும் யாழ் பொது நூலகத்தின் சிறப்பை பற்றிச் சொல்லித் தான் தெரியவேண்டும் என்றில்லை.
எங்களுடைய நூலகம் அன்று எரிந்தது, இன்று உங்களுடையது என்று சொல்லும் போதே அவற்றை எரியூட்டியவர்களை நாம் எந்த நிலையில் வைத்துப் பார்க்கிறோம்? என்னும் கேள்வியும் எழுகிறது.
--
இதே, மே மாத்தில் “எங்கள் நிலம் பற்றி எரிந்தது, இன்று உங்கள் நிலம் எரிகிறது” என்றுரைப்பது எங்களுக்குள் ஒளிந்திருக்கும் குறுகிய மனோநிலையின் வெளிப்பாடே. அடுத்தது, தமிழர்கள் கொன்றழிக்கப்பட்டதை குறுகல் எண்ணங் கொண்ட இந்த கலவரங்களுடன் ஒப்பிடுவதே பெரும் பிழை.
--
எதுவானாலும் சின்னச் சின்ன காரணங்களிற்காக சிங்கள பேரினவாதம் மயக்கநிலைக்கும் குட்டித் தூக்கத்திற்கும் போய்ப் போய் வருகிறது. அதை வைத்து அதற்கு மரணச் சான்றிதழ் கொடுத்து விடலாம் என்று எண்ணி விடுகின்றோம். அந்த பேரினவாதம் மீளவும் நமக்கெதிராய் திரும்பும். எச்சரிக்கை கொள்வோம்.
இதுவும் ஒரு ஒப்பீட்டுப் பதிவே! 🤪


Comments
Post a Comment