அகிம்சைக்கே அகிம்சையை போதித்தவர் அன்னை பூபதி !
உலகிற்கே அகிம்சையை போதித்ததே நாங்கள் தான் என்று கூவிக் கொண்டு தமிழர் தாயகத்தில் அடாவடியில் ஈடுபட்ட இந்தியம், தனது ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தம்முயிர் நீத்த தியாகதீபங்கள் அன்னை பூபதி மற்றும் அண்ணன் திலீபன் முன்னால் வெட்கி நாணமிளந்து நிற்கின்றன.
இந்திய ஒன்றிய அரசுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் ஏற்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக அமைதிப்படையென்ற போர்வையில் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இந்திய ராணுவம் நிலைகொண்ட காலம் அது. தமிழர் தாயகத்தில் அமைதியை ஏற்படுத்தப் போகிறோம் என்று தாயகத்தினுள்ளே நுழைந்து தமிழரின் உரிமைப் போராட்டத்தை முடக்குவதிலும் தொடர்ச்சியான உயிர்க்கொலைகளிலும் ஆக்கிரமிப்பு அடாவடிகளிலும் ஈடுபட்டு வலிந்து போரை திணித்துக் கொண்டிருந்தது.
இந்திய ஆக்கிரமிப்புப் படைகளிற்கு எதிராக யாழில் தியாக தீபம் திலீபன் உண்ணாநோன்பிருந்து 26 செப்டெம்பர் 1987 ஆம் ஆண்டு தம்முயிரை நீத்திருந்த நிலையில், அவரைத் தொடர்ந்து மட்டு, அம்பறை மாவட்ட அன்னையர் முன்னணியைச் சேர்ந்த அன்னை பூபதி அவர்களும் 31 நாட்கள் உண்ணாநோன்பிருந்து 19, ஏப்ரல் 1988 அன்று தம்முயிரை தமிழர் தாயகத்திற்கான ஈகம் செய்திருந்தார்.
அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரை வலிந்து திணித்துக் கொண்டிருந்த இந்திய அமைதிப்படைக்கு எதிராக மட்டக்களப்பு – அம்பாறை அன்னையர் முன்னணி இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத அறப்போரை தொடங்கியிருந்தது.
- உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- புலிகளுடன் பேச்சு நடாத்தி தீர்வு காண வேண்டும்.
என்பனவையே அவையாகும். ஆனால் அவர்களது கோரிக்கைகள் எவையும் இந்திய ராணுவத்தின் செவிகளில் விழவில்லை. தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாவிரதத்தில் அணி திரண்ட நிலையில் அன்னையர் முன்னணியுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தது இந்தியப்படை.
இந்தியப் படைகளுடனான பேச்சுவார்த்தை.
04, சனவரி, 1988 –
அன்று அன்னையர் முன்னணியை திருகோணமலையில பேச்சு வார்த்தைக்கு அழைத்து இந்தியப்படையின் உயரதிகாரியான “பிரிகேடியர் சண்டேஸ்” பேச்சுவார்த்தை நடாத்தினார். அன்னையர் முன்னணியினால் தமது இரு கோரிக்கைகளும் மீள நினைவூட்டப்பட்ட போதிலும் அவை நிறைவேற்றப்படவில்லை.
10, பெப்ரவரி, 1988 –
அன்று அன்னையர் முன்னணியின் நிர்வாகக் குழுவினரை பேச்சுவார்த்தைக்கு கொழும்பிற்கு அழைத்த இந்தியா, தூதுவர் டீக்சித் மூலமாக பேச்சுவாத்தையை நடாத்தியது.
புலிகள் தமது ஆயுதங்களை இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்திய இந்தியாவை கடுமையாகக் கண்டித்த அன்னையர் முன்னணியினர், “விடுதலைப் புலிகள் எங்கள் பாதுகாவலர்கள், நீங்கள் தான் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வர வேண்டும்” என்று வலிந்து போரைத்திணிந்த இந்தியாவிடம் தெரிவித்தனர்.
சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்.
இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் நிலைமை மோசமடையும் தருணத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கிறோம் என்று பலரும் முன்வந்ததால், குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்று அன்னம்மா டேவிட் அவர்கள் அவர்கள் 16, பெப்ரவரி 1988 ஆம் திகதி தனது உண்ணாவிரதப் போராட்டத்தை மட்டக்களப்பு, அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய குருந்தை மரநிழலில் தனது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். அவரது போராட்டத்திற்கு செவிகொடுக்காத இந்தியப்படை, அணியெணத் மக்கள் திரண்ட நிலையில் பல்வேறு மிரட்டல்கள், கெடுபிடிகளை ஏவிவிட்ட போதும் போராட்டம் இடம்பெற்றது.
அன்னம்மா அவர்களின் பிள்ளைகளைக் கைது செய்து “பலாத்கார அச்சுறுத்தல் காரணமாகவே அன்னம்மா உண்ணாவிரதமாயிருக்கிறார்” என்று எழுதிக் கையொப்பம் வாங்கிக் கொண்டனர். அதைச் சாட்டாகக் கொண்டு அன்னம்மாவை காப்பாற்றுவது போல், உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றனர்.
அன்னை பூபதியால் முழுமைபெற்ற அறப் போராட்டம்.
இந்த நிலையில்த் தான், அன்னை பூபதி தன் போராட்டத்தை தொடங்க எண்ணினார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன், எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனே அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது என்று கடிதம் எழுதி வைத்தார்.
19, மார்ச் 1988 அன்று மட்டக்களப்பு அமிழ்தகழி ஆலயத்தில் அதேயிடத்தில் இந்தியப் படைகளின் பல தடங்கல்களுக்கும் மத்தியில் நீர் மட்டும் அருந்தி தனது போராட்டத்தினை தொடங்கினார். இந்தியப் படையினரால் பலர் வெருட்டப்பட்டும், ஒத்துழைப்பு வழங்கியவர்கள் கைதும் செய்யப்பட போதும் போராட்டத்தை நிறுத்தாது அன்னை பூபதி போராட்டத்தை உறுதியாகத் தொடர்ந்தார்.
கோரிக்கைகள் எவையும் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19, ஏப்ரல் 1988 அன்று தமிழர் தாயகத்தின் ஆக்கிரமிப்பு நிலை மீள தம்முயிர் நீத்தார். அவரது உடலைக் கைப்பற்ற இந்திய ராணுவம் எடுத்த முயற்சிக்கு எதிராக மக்கள் கடுமையாகப் போராடி உடலைக் காத்தனர்.
உலகத்தின் ஒப்பற்ற தியாக வரலாறு
இதற்கு முன்னதாக, தியாக தீபம் திலீபன் அவர்கள் இந்திய ராணுவத்திற்கு எதிராக நீராகாரம் கூட அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த நிலையில், தனது சாவு உறுதியானது என்றறிந்தும் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளால் தமிழர் தாயகத்தின் மீது வலிந்து திணிக்கப்பட்ட போரை எதிர்ப்பதில் உறுதியும் துணிச்சலும் மிக்க அவரது தியாகம் கண்டு இந்த வீரத்தமிழ் வியந்து நின்றது. நிற்கிறது.
ஒரு பெண் உண்ணா நோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்த வரலாறு, உலக வரலாற்றிலேயே எங்கும் இல்லை. அகிம்சை பற்றி தமிழர்களுக்கு வகுப்பு எடுக்க / போதிக்க வருபவர்களை யோசிக்க வைக்கும் ஆயுதம் தான் அன்னை பூபதியினுடைய தியாகம். அன்னை பூபதி, அண்ணன் திலீபன் ஆகியோரது தியாகங்கள் யாராலும் நெருங்க முடியாத அல்லது செய்ய முடியாத வடிவங்கள்.
திலீபன் போராளி ! அன்னை பூபதி ஒரு தாய் ! போராளிக்கும் தாய்க்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. மாறாக போராளியும் தாயும் ஒன்றுபடுவதற்கும் ஓரிடம் இருக்கிறது.தன் மக்களை அழிவிலிருந்து காக்க போராளி போர்க்கோலம் பூணுகிறான் ! அதேபோல தன் குஞ்சுகளுக்கு உயிராபத்தென்றால் தாய்க்கோழிகூட போர்க்கோலம் பூணும் ! எனவேதான் போர்க்கோலம் பூணுமிடத்தில் போராளியும் தாயும் பேதமின்றி ஒற்றுமைப் படுகிறார்கள்.



Comments
Post a Comment